திங்கள், 21 மார்ச், 2011

ஒன் குத்தமாஆ... என் குத்தமாஆ...?!!?

நேற்று நான் மிகவும் களைத்து இருந்தேன். ஒரு வாரமாக, எனக்கு ஒரே தொண்டைவலி. ஞாயிற்றுக்கிழமை ஆனதால் குளியலுக்கும் லீவு விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். மதியம் குழந்தைகள் இருவரும் நீச்சல் குளத்தில் சென்று விளையாட விரும்பினர். உடை மாற்றி கிளம்பும் போதே, நானும் அவர்களுடன் நீரில் விளையாட வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விட்டார்கள். சரி, இதையும் தான் சமாளிப்போமே என்று ஒரு தைரியத்தில் அவர்களுடன் சென்றேன்.

நீச்சல் குளத்தைப் பார்த்தவுடன், சந்தோஷ கூக்குரலுடன் இறங்கி விளையாட ஆரம்பித்து விட்டனர். ஓரளவு அவர்களுக்குள் விளையாடி களைத்தபின், நான் இன்னும் குளத்தில் இறங்காமல் இருப்பதைக் கண்டுகொண்டனர். அதற்கு மேலும் அவர்களை கெஞ்ச விட மனமில்லாமல் நீரில் இறங்கிவிட்டேன். தன் தாயுடன் விளையாடுவதில் இவர்களுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்! எனக்கும் தான்! அந்த சந்தோஷ சிரிப்பலையில் வலி மறந்து செம ஆட்டம் போட்டதில் தலை முழுதும் நனைந்துவிட்டது.

வீட்டிற்கு வந்ததும், தலைமுடி காய வைக்கிறேன் என்று ஃபேன் போட்டுவிட்டு அப்படியே நன்கு அசந்து தூங்கிவிட்டேன். சிறிது விழிப்பு வந்தபோது, என் கணவர் வீட்டிற்கு வந்ததின் அடையாளமாக பிள்ளைகளுடன் ஹாலில் பேசுவது கேட்டது.

"அனு, பால் டேபிளில் வைத்தேனே குடிச்சியா?"

"ம்" என்றாள் மகள்.

ஹை! அடுத்து ந‌ம்மிட‌ம் கேட்க‌ வ‌ர‌க்கூடும் என்று எழுந்து அம‌ர்ந்துக் கொண்டேன். ஐந்து ப‌த்து நிமிட‌ம் ஆகியும் வ‌ர‌வில்லை. 'வெறும் காத்து தாங்க‌ வ‌ருது' குர‌லை கஷ்டப்பட்டு உய‌ர்த்தி, "என்னங்க‌, இங்கே வாங்க‌ளேன்" என்றேன். உட‌னே வ‌ந்தார்.

"என்ன‌?"

"ரொம்ப‌ தொண்டை வ‌லிக்குது, கொஞ்ச‌ம் சூடா குடிக்க‌ எதாவ‌து வேணும். வெந்நீராவ‌து..." நான் ஏன் காபி வேணும்னு நேர‌டியா கேட்க‌லைனு ம‌ன‌சுக்குள்ள‌யே நினைச்சுக்கிட்டேன்.

கொஞ்ச‌ நேர‌ம் பாத்திர‌ங்க‌ள் உருட்டும் சத்த‌ம். என் அருகே வ‌ந்த‌வ‌ர் கையில் ஒரு சொம்பு. கையில் வாங்கும் போதே அது கொதி நிலையில் இல்லாம‌ல் தொண்டைக்கு இத‌மான‌ சூட்டில் இருப்ப‌து தெரிந்த்து. ஒரே மூச்சில் குடித்துவிட்டு கேட்டேன்.

"ஏங்க‌, உங்க‌ பொண்ணுக்கு ம‌ட்டும் பால் கொடுத்தீங்க, என‌க்கும் ஒரு காபி க‌ல‌ந்து குடுத்து இருக்க‌லாம் இல்ல" லேட்டானாலும் கேட்டே விட்டேன்.

"காபி வேணும்னா அப்புற‌ம் ஏன் வெந்நீர் வேணும்னு சொன்னே?" என்று requirementsஐ ச‌ரி பார்க்க‌ சொன்னார், என் சொன்ன‌தைச் செய்யும் ச‌த்திய‌வான்.

ஹும், நாம‌ எதிர்பார்க்க‌ற‌து என்னைக்கு கிடைச்சுது என‌ நினைத்த‌ போது FMல் மிக‌ச் ச‌ரியாக‌ ஒலித்த‌ பாட‌ல்....(மீண்டும் த‌லைப்பை ப‌டியுங்க‌!)

வெள்ளி, 17 டிசம்பர், 2010

நெஞ்சம் சொல்லுதே

நேற்று கேட்ட பாடல்களில் பிடித்த சில வரிகள் இதோ...

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?

என் காதலும் என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...

பிரிவு

இன்று மகளைப் பள்ளிக்கு

ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றேன்

பள்ளியில்

அவள் இறங்கிக் கொண்டாள்

மனதில்

பாரம் ஏறிக் கொண்டது.

சனி, 11 டிசம்பர், 2010

காதல்

அன்று...
உன் சுவாச‌ம் தொட்ட‌தாலேயே,

இந்தக் காற்றைக் காதலிக்கிறேன்
உன் பாத‌ம் ப‌ட்ட‌தாலேயே,
இந்த ம‌ண்ணை காதலிக்கிறேன்
உன்னை ஈன்ற‌தாலேயே,
உன் தாயைக் காதலிக்கிறேன்
உன்னோடு உற‌வான‌தாலேயே,
உன் குடும்ப‌த்தையும் காதலிக்கிறேன்
உனக்கு பட்டம் தந்தாலேயே,
இந்தக் கல்லூரியைக் காதலிக்கிறேன்


இன்று...
நீ என் மீது கோபம் கொண்டாய்,
எனக்கு சுவாசிக்க காற்று இல்லை
என்னால் நிலை கொள்ள முடியவில்லை
என் தாயின் அன்பு தேற்றவில்லை
என் பிள்ளைகள் பசி புரியவில்லை
நம் பட்டங்களால் புத்தி தெளியவில்லை

புதன், 3 டிசம்பர், 2008

இயற்கையின் செயற் பெயர்கள்

இடி 'இடி'க்கிறது
மின்னல் 'வெட்டு'கிறது
மழை 'கொட்டு'கிறது
சாரல் 'அடி'க்கிறது
அட மனிதா, இவற்றிலுமா வன்முறை?

செவ்வாய், 2 டிசம்பர், 2008

பரப் பார்வை

மீன் வாயைப் பிளக்கிறது
மனிதன் தீனி போடுவான் என்று
மனிதன் வாயைப் பிளக்கிறான்
மீன் நல்ல தீனி என்று.